search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயிரத்தம்மன் கோவில்"

    பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு ஹோமமும் நடந்தது. 10.15 மணிக்கு கொடி மரத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஓம்சக்தி, ஆயிரத்தம்மன் என்று பக்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    இதைத்தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. 11.30 மணிக்கு காப்பு கட்டுதலும், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இரவில் அம்மன் வீதி உலா நடந்தது. முன்னதாக யானை மீது கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    இதேபோல் பாளையங்கோட்டையில் உள்ள தூத்துவாரி அம்மன், தெற்கு முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், யாதவ உச்சிமாகாளி, விசுவகர்ம உச்சிமகாளி, வடக்கு உச்சிமாகாளி, முப்பிடாதி அம்மன், கிழக்கு உச்சிமாகாளி அம்மன், புதுப்பேட்டை தெரு உலகம்மன் கோவில், புது உலகம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களிலும் தசரா விழாவையொட்டி நேற்று காலை 10 மணிக்கு துர்கா பூஜையும், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. இரவில் சப்பர பவனி நடந்தது.

    அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ஆயிரத்தம்மன், பாளையங்கோட்டை முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளிய போது எடுத்த படம்

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் அனைத்து அம்மன் கோவில் சப்பரங்களும் ஆயிரத்தம்மன் கோவில் முன்பு அணிவகுத்து நிற்கும். அப்போது சிறப்பு தீபாராதனையும், பந்தலில் கொடி நட்டுதலும் நடக்கிறது. இதைத் தொடர்ந்து அனைத்து அம்மன்களும் கோவிலுக்கு சென்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் கொலு இருந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தசரா திருவிழா நடக்கிறது. ஆயிரத்தம்மன், பேராச்சி அம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோவில்களிலும் காலை 10 மணிக்கு துர்கா பூஜையும், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு சப்பர பவனியும் நடக்கிறது.

    20-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 6 மணிக்கு 12 சப்பரங்களும் பாளையங்கோட்டை ராமசாமி கோவில் திடலில் அணிவகுத்து நிற்கும். அப்போது அங்கு சிறப்பு தீபாராதனை நடக்கும். மதியம் 12 மணிக்கு அந்த சப்பரங்கள் பாளையங்கோட்டை கோபால்சாமி கோவில் திடலை வந்தடையும். இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை மார்க்கெட்டை வந்தடையும். இரவு 12 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு 12 அம்மன்களும் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
    ×